வியாழன், 23 செப்டம்பர், 2021

பா.ஜ.க. தலை எடுத்ததால் ஏற்பட்ட நிகர பலன்?


சாமியார்களின் தலைமை மடங்கள் என்று கூறிக்கொண்டு பல இருந்தாலும், அலகாபாத் பாகம்பரி மடம் தான் அனைத்து சாமியார் மடங்களுக்கும் தலைமையானது என்று கூறப்படுகிறது. இதன் தலைவராக இருந்த சாமியார் நரேந்திர கிரி, அய்யத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இதனை அடுத்து இவரது மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

அலகாபாத்தில் உள்ள அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற இந்திய சாமியார்களின் தலைமையிடம், சங்கராச்சாரியார் உருவாக்கிய மடங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், மற்ற எந்த ஒரு சாமியார் மடமும் போலியானது என்று அறிக்கை விட்டுள்ள இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் சாமியார்  நரேந்திர கிரி.

இந்த நரேந்திரகிரி சாமியார் முலாயம் சிங் ஆட்சிக்காலத்திலும், அகிலேஷ் ஆட்சிக் காலத்திலும் பாஜகவின் உதவியால் அரசை கலைத்துவிடுவேன் என்று மிரட்டியவர்.  அதுமட்டுமல்லாமல் உத்தரப் பிரதேச தலைமைக் காவல் ஆணையரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக வளைத்துக் கொண்டார். இதன் காரணமாக தலைமை செயலகத்தில் உத்தரப் பிரதேச தலைமைக்காவல் ஆணையரே பட்டினிப் போராட்டம் நடத்தினார். இதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த அளவிற்கு சாமியார் அரசியலில் தனது ஆதிக்கத்தைக் செலுத்தியிருந்தார்.

 மரணமடைந்த சாமியார் நரேந்திர கிரிக்கு முறையற்ற பெண் தொடர்புகள் அதிகம் உண்டு. இவர் தமது பாதுகாப்பாளராக இருந்தவரின் மனைவியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்து அந்த விவகாரம் வெளியே தெரிந்த உடன் அந்தப் பாதுகாவலருக்குப் பல கோடி மதிப்பிலான மாளிகையை எழுதிக்கொடுத்தார். இதனை அடுத்து ஊர்க்காரர்கள் சில ஆயிரங்கள் மட்டுமே ஊதியமாகப் பெற்று வந்த காவலருக்கு பல கோடி மதிப்பு மாளிகை எப்படி சொந்தமானது என்று கேட்டுப் போராட்டம் நடத்தினர்.

 இந்த விவகாரத்தில் சாமியார் தனது பெயர் வராமல் இருக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து எதிர்ப்பாளர்களை மடக்கிய தாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மடத்தை நிர்வகிக்கும் சில நிர்வகிகளுக்கும், சாமியாருக்கும் பிரச்சினை இருந்து வந்தது,

 இந்த நிலையில் இவரது மோசடிகளை வெளிக்கொண்டு வருவோம் என்று மிரட்டிய அவரது முக்கிய சீடர்கள் - பல பெண் களோடு அவர்களும் தொடர்பில் இருந்து மடத்தின் சொத்துக்களை வாரி வழங்கினர். 

சமீபத்தில் சாமியாரின் தலைமை சீடரும், யோகா குரு என்று தன்னைக் கூறிக்கொள்ளுபவருமான   ஆனந்த கிரி முதலமைச்சர் ஆதித்யநாத்தைச் சந்தித்து  தலைமை சாமியார் நரேந்திர கிரி குறித்துப் பல புகார்களை சான்றுகளோடு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து தற்போது மரணமடைந்த சாமியார் நரேந்திர கிரி தன்னுடைய சீடர்கள் குறித்த புகாரை கொடுக்க  மோடி, அமித்ஷா,  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் போன்றவர்களை சந்திக்க முயற்சித்தார். கரோனா காரணமாக அவருக்கு அனுமதி கிடைக்காததால் தனது சீடர்களின் முறையற்ற பாலியல் காணொலிகள், அவர்கள் பெண்களுக்கு எழுதிக்கொடுத்த மடத்தின் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மோடிக்கு அனுப்ப முடிவு செய்து சேகரித்து வைத்திருந்தார். இதனை அறிந்துகொண்ட   யோகா குரு என்று தன்னைக்கூறிக்கொள்ளும் ஆனந்த கிரி  கடுமையான மோதலில் ஈடுபட்டார் 

இதையடுத்து, அகாடா பரிஷத் மற்றும் பாகம்பரி மடத்திலிருந்து ஆனந்த் கிரி வெளியேற்றப்பட்டார்.  இந்த நிலையில் தலைமை சாமியார் நரேந்திரகிரி அய்யத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.  அவரது அறையில் இருந்த பல பொருட்கள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதும் தெரியவந்துள்ளது.

 சாமியார் மடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது புதிதல்ல, அயோத்தியில் உள்ள சாமியார் மடங்களில் வெளிநாடுகளில் இருந்து கூட விலைமாதர்களை சீடர்கள்  என்ற பெயரில் அழைத்துவந்து கூத்தடித்த விவகாரங்கள் காணொலிகளாக வெளியாகி சாமியார்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன.

 இப்படி பல சாமியார்கள் பாலியல் வக்கிரம் கொண்டு அலைவதும், சிக்கிக் கொண்ட பிறகு சொத்துக்களை எழுதிக் கொடுப்பதும் மக்களிடத்தில் அவமதிப்பை ஏற்படுத்தி விட்டது. சாமியார்களின் மோசடிகளைப் பயன்படுத்தி சிலர் சாமியார்களிடம் பெண்களை அனுப்பி அதை ரகசியமாக படம் பிடித்து மிரட்டுவது, அவ்வாறு மிரட்டுபவர்கள் கொலை செய்யப்படுவதும், அலகாபாத், வாரணாசி, பைசாபாத் (அயோத்தியா) போன்ற இடங்களில் பொதுவான காட்சியாக உள்ளது.  ஆனால் இப்போது இந்தியாவிற்கு சாமியார்களின் தலைவராக உள்ள நரேந்திர கிரி மரணம் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது,

 இவர் 2015 ஆம் ஆண்டு பாலியலைத் தூண்டும் போதை மருந்துகளை கொண்டுவரச்சொன்னதாக டில்லி விமான நிலையத் தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கூறியதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த மடத்திற்கு நாடு முழுவதும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் பக்தர்கள் நன்கொடையாக கொடுத்தவை ஆகும்.

உ.பி.யில் முதல் அமைச்சராக இருப்பவரே - ஒரு மடத்தின் தலைவராக இருந்தவர்தானே!

பா.ஜ.க. அரசியலில் தலை எடுக்க ஆரம்பித்ததால் ஏற்பட்ட நிகர பலன் இதுதான்!

இந்துராஜ்ஜியம் அமைக்கத் துடிப்போர் பதில் கூறுவார்களா?