பெரம்பூரில் வசிப்பவர் 45 வயதான திருமதி. லதா ரமேஷ் என்பவர்; அவரது மகளுக்குப் பேச்சு வரவில்லை அல்லது திக்குவாய் என்ற குறையையோ போக்க, (மருத்துவர்களிடம் போகாமல்) மேடவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரியும் 26 வயது தினேஷ் என்ற பார்ப்பனரிடம் சென்று கடவுளருள் மூலம் குணப்படுத்த வேண்டிக் கொண்டார்.
வீட்டிலுள்ள அத்தனை நகைகளையும் ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி - "90 நாள் அம்மனிடம் தொடர்ந்து வேண்டி பூஜை, அபிஷேகம் - ஆராதனை செய்து வந்தால் அந்த வாய் பேசாத பெண் பேசுவாள்" என்று நம்பிக்கையூட்டினான் அந்த அர்ச்சகப் பார்ப்பனன் தினேஷ்.
90 நாள் கழித்து பாத்திரத்தைத் திறந்து பார்த்தால் 15 சவரன்கள் உள்ள நகைகள் வைத்த இடத்தில் - பாத்திரத்தில் வெறும் கற்களே இருந்தன.
பிறகுதான் நகைகளைப் பறிகொடுத்த இந்த லதா - வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டு, போலீசில் புகார் கொடுத்துள்ளார்!
இந்த அர்ச்சகப் பார்ப்பனரான தினேஷ் - முதல் முறை - இப்படி பக்தி வேஷத்தில் 'சுவாகா' செய்யவில்லை. இவன் இதற்கு முன்பே - சரியான மோசடி மன்னனாம்! பள்ளிக்கரணையில் 60 வயதான வேணுகோபால் என்பவரையும், இப்படி ஏமாற்றியுள்ளதாக போலீஸ் ரிக்கார்டு கூறுகிறது; அவரிடம் 5 சவரன் நகையை வாங்கி, "உனது கெட்ட தோஷங்கள் நீங்க" என்று அவரிடம் மோசடிசெய்துள்ளான்!
காவல்துறையின் ஆவணங்கள் இவன் - இந்த அர்ச்சகப் பார்ப்பான் கை தேர்ந்த "மிஸ்டர் 420" என்கின்றன; 2017ஆம் ஆண்டிலேயே புழல் சிறைக்குச் சென்றவனாம்!
பிறகு மீண்டும் இவனுக்கு கோயில் அர்ச்சகர் வேலை எப்படிக் கிடைத்தது? யார் மூலம் இவன் கோயில் அர்ச்சகர் ஆனான்? இதுபற்றி எவரும் விசாரிப்பதில்லையா?
இவனும் எஸ்.வி.சேகர், எச். இராஜா போல 'ஜம்'மென்று காலரைத் தூக்கி விட்டு எடப்பாடி அரசின் போலீஸ், பற்றிப் பேசி 'அம்மனின் ஏஜெண்ட்டாக' வலம் வருகிறான் போலும்!
எவ்வளவு பஞ்சமா பாதகம் செய்தாலும் பார்ப்பனர்கள் தப்பித்து விடுகிறார்கள் - இது இன்று நேற்றிலிருந்து அல்ல!
திருவிளையாடற் புராண காலத்திலிருந்தே நாம் பார்த்து, கேட்டு, படித்து வரும் வாடிக்கையான - வழமையானவைதான்!
அன்னையைப் புணர்ந்து தாதை குரவன் ஆம் அந்தணாளன் தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடு அளித்தது என்றால் பின்னை நீர் இழி நோய் குட்டம் பெரு வயிறு ஈளை வெப்பு என்று இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை. என்பதுதான் அந்த திருவிளையாடல் பாடல் - (மாபாதகம் தீர்த்தபடலம் - பாடல் 1573)
மதுரையில் தாயைப்புணர்ந்து, தட்டிக் கேட்ட அவன் தந்தையைக் கொலை செய்த பார்ப்பனக் கொடூரனுக்கு சிவபெருமான் - சொக்கனோ - மக்கனோ ஏதோ ஒரு வடிவில் தோன்றி, "நீ பொற்றாமரைக் குளத்தில் (மீனாட்சியம்மன் கோயில் குளம்) மூன்று முறை மூழ்கி எழுந்தால் முக்தி நிச்சயம்" என்றாராம்!
அட பக்தி மூடநம்பிக்கைக்கு பலியான பரிதாபத்திற்குரிய பக்தர்களே, கேடி, கள்வன், பஞ்சமா பாதகன் என்றாலும் பார்ப்பனருக்குத்தான் பிராயச் சித்தம் - கழுவாய் - வருவாய் - மோட்சத்தில் 'ரிசர்வேஷன்' - உங்களுக்குப் பிச்சை பட்டை சோறு தானா?
"பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்"
என்றாரே தந்தை பெரியார் - அது சரிதானே?
***
முழு நிலவு முந்நாள் என்றால் அதில் ஊடகங்களில், சில தொலைக்காட்சிகளில் - நிலவில் சாய்பாபா உருவம் தெரிகிறதாம்! இப்படி ஒரு திடீர் புருடா! உடனே பார்த்ததாக இரண்டு பேர்! என்னய்யா கொடுமை! அவனவன் கையில் செல்போன் - ஆன்லைன் என்ற யுகத்தில் கூடவா இப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?
முன்பு நமது குழந்தை பருவத்தில் நிலாவில் "அவ்வைக் கிழவி பாட்டி பாக்கு இடிக்கிறாள், வடை சுடுகிறாள்" என்று பாட்டிகள் கதை சொல்லி சோறு ஊட்டியது உண்டு! இப்போதும் இப்படியா?
***
தொலைக்காட்சியில் மற்றொரு அருவருப்புக் காட்சியை ஒரு நாள் கண்டேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் என்ற "அறிவின் வேந்தர்" ஒருவர் - வேட்டி மட்டும் கட்டி, சட்டையில்லாமல் கோயிலில் பக்திப் பரவசத்துடன் "டான்ஸ்" ஆடுகிறார்! பாஸ்கர் என்பது அவரது திருநாமமாம்! இவருக்கு "பக்தி ரத்னா" பட்டத்தை - கொடுக்கலாமே! இவருக்குப் பதவி கொடுத்த மேதைகள் யாரோ! வெட்கம்! மகா வெட்கம்!! - இல்லையா?
- விடுதலை நாளேடு,27.9.18