வெள்ளி, 28 செப்டம்பர், 2018

தோசம் கழிப்பதாக கூறி பெண் கழுத்தறுத்து கொலை! சிக்கினான் சாமியார்

புதுச்சேரி, செப்.22 நகைக்கு ஆசைப்பட்டு, தோசம் கழிப்பதாக கூறி, இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த  சாமியார், காவல்துறையினரிடம் சிக்கினான்.

புதுச்சேரி மாநிலம், கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அசோக்; கட்டட தொழிலாளி. இவரது மனைவி சிந்துஜா, வயது 25. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் காலை, கரிக்கலாம்பாக்கம் தெப்பக்குளம் காளி கோவில் அருகே, கழுத்து அறுபட்ட நிலையில், சிந்துஜா கொலை செய்யப்பட்டு கிடந்தார். நரபலியா என்ற சந்தேகத்தில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தராசு, 46, என்ற  சாமியார், அசோக் குடும்பத்தில் தோசங்கள் இருப்பதாகவும், அதை கழித்தால் தான் குடும்பம் செழிக்கும், திருமணம் நடக்காமல் உள்ள அசோக் தங்கை திலகத்திற்கு திருமணம் நடக்கும் என கூறி, அவ்வப்போது பரிகாரம் செய்து, பணம் பறித்துள்ளான்.அசோக்கிற்கு தெரி யாமல், சிந்துஜாவிடம் கணவர் உயிருக்கு ஆபத்து என கூறி, அதற்கு உண்டான பூஜைகள் செய்தால், அவரை காப்பாற்றி விடலாம் எனவும் கூறியுள்ளான். இதற்காக, நகைகளுடன், காளி கோவிலுக்கு வருமாறும் கூறியுள்ளார்.மூடநம்பிக்கையில் மூழ்கிய சிந்துஜா,  சாமியாரின் பேச்சை நம்பி, 20ஆம் தேதி இரவு, 8:30 மணியளவில் குளித்து, கணவரின் தங்கையின் திருமணத்திற்கு எடுத்து வைத்திருந்த நகைகளுடன், காளி கோவிலுக்கு சென்றுள்ளார்.

காளி கோவிலில் சாமி கும்பிட்ட சிந்துஜாவை, அருகே இருந்த புளியமரத்தடிக்கு கோவிந்தராசு அழைத்து சென்று, மரத்தடியின் கீழ், சாக்கின் மீது கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர வைத்துள்ளான். அவரது புடவையாலேயே இரு கைகளையும் கட்டியுள்ளான்.இறந்து போன மாமனாரை நினைத்து, ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுமாறு தெரிவித்தவன், கண் இமைக்கும் நேரத்தில், மறைத்து வைத்திருந்த கத்தியால், சிந்துஜாவின் கழுத்தை அறுத்து, கீழே சாய்த்து, மடியில் வைத்திருந்த நகைகளுடன், தலைமறைவாகி விட்டான்.போலி சாமியார் கோவிந்தராசுவை காவல்துறையினர் கைது செய்து, விசாரிக்கின்றனர்.

- விடுதலை நாளேடு, 22.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக