ஞாயிறு, 2 ஜூலை, 2017

அர்ச்சகர்மீது பாலியல் வன்முறை நில அபகரிப்பு புகார் - வழக்கு

பத்ரிநாத், ஜூலை 2 பத்ரிநாத் கோயிலின் மேனாள் தலைமை அர்ச்சகர்  மற்றும் பத்ரிநாத், கேதார்நாத் கோயில் குழுவின் தலைமை செயல் அலுவலர் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த சாமியாரினியான ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து சாமியாரிணி சமோலி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பத்ரிநாத் கோயில் மேனாள்  தலைமைப்பூசாரியான விஷ்ணு பிரசாத் நம்பூதிரி மற்றும் தலைமை செயல் அலுவலர் பி.டி.சிங் ஆகிய இருவர்மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சமோலி காவல்துறை கண்காணிப்பாளர் திருப்தி பட் கூறும்போது, “மும்பையைச் சேர்ந்த சாமியாரிணி என்பவர் பத்ரிநாத் கோயிலுக்கு கடந்த மாதம் சென்றார். அப்போது அர்ச்சகர்  விஷ்ணு பிரசாத் நம்பூதிரியும், பத்ரிநாத் கோயில் தலைமை நிர்வாக செயல் அலுவலர் பி.டி.சிங்கும் அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டனர். அவர் கொடுத்த புகாரின்பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “பத்ரிநாத் கோயிலின் மேனாள் தலைமை அர்ச்சகர் விஷ்ணு பிரசாத் நம்பூதிரியும், பத்ரிநாத் கோயில் தலைமை செயல் அலுவலர் பி.டி.சிங் இருவரும் சேர்ந்து மும்பை சாமியாரிணியின் சொத்துகளை அபகரிக்க முயன்றுள்ளனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாக அய்யத்துக்கிடமான வகையில் சாமியாரிணியின் குடும்பத்திலிருந்து அய்ந்து பேர் காணாமற் போயுள்ளனர். சாமியாரிணியின் குடும்பத்தினர் காணாமற்போனதுகுறித்து விசாரணை செய்யவும் ஒரு குழு மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார். இதேபோன்று கடந்த காலங்களிலும் பாலியல் புகாருக்கு பத்ரிநாத் கோயில் மேனாள் தலைமை அர்ச்சகர் கேசவ் பிரசாத் நம்பூதிரி என்பவர் உள்ளானார்.  கடந்த 2014 ஆம் ஆண்டில் டில்லியில் விடுதியில் குடிபோதையில் பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட புகாரின்பேரில் காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விடுதலை,2.7.17