வியாழன், 1 ஆகஸ்ட், 2024

பிடித்தது முற்றிப்போன ‘‘மூடநம்பிக்கைப் பேயே!’’



 மன நோயால் பாதிக்கப்பட்ட மாணவியை பேய் பிடித்தவர் என்று கூறி தலையில்

77 குண்டூசிகளைத் திணித்த சாமியார்: அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள் அதிர்ச்சி!

* கருஞ்சட்டை *

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ரேஷ்மா (வயது 19). இவர் தலை யில் கடுமையான வலி என்று கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார். முதலில் அவருக்கு தலைவலி தொடர்பான மாத்திரைகளை தந்து அனுப்பி விட்டனர்.

இருப்பினும் அவருக்கு வலி நிற்காததால் அவரது தலையை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது, தலை முழுவதும் சிறிய சிறிய குண்டூசிகள் இருந்தன.


இதனை அடுத்து அவரை பாலங்கீர் நகர அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அனைத்து ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றினர்.
இது தொடர்பாக விசாரித்தபோது

சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் இறந்துவிட்டார். இதனால் அவருக்கு மனநிலை பாதித்தது, அவருக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறி அங்குள்ள சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்றனர். அவரோ மந்திரிக்கப்பட்ட ஊசியை தலையில் குத்தினால் பேய் ஓடிவிடும் என்று கூறி முதலில் ஒரு ஊசியைத் தலையில் குத்தி உள்ளார்.

பின்னர் தொடர்ந்து அவரிடமே ரேஷ்மாவை அழைத்துச்செல்ல அவரே தொடர்ந்து 77 ஊசிகள் வரை தலையில் குத்தி வெளியில் தெரியாமல் திணித்துள்ளார். நான்கு ஆண்டுகளாக கொடுமையான வேதனைகளை அனுபவித்து வந்த ரேஷ்மா மருத்துவ விஞ்ஞானத்தால் தற்போது நலமாக உள்ளார்.

ஊசியைக்குத்தியதால் தலையில் உள்ள திசுக்கள் சேதமடைந்துள்ளன. இருப்பினும் மண்டை ஓட்டிற்குப் பாதிப்பு இல்லை. இன்னும் சில காலம் மருத்துவ சிகிச்சையில் இருக்க மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மருத்துவமனை அளித்த புகாரின் அடிப்படையில் தலையில் ஊசியைக் குத்திய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.