செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பாலியல் வன்கொடுமை, கொலைகளில் ஈடுபட்ட சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

வரவேற்கத்தக்க சிறப்பான தீர்ப்பு

ரூ.30 லட்சம் அபராதம்



ரோடக், ஆக.29  பெண் சீடர்கள் இருவரை பாலியல் வன்முறை செய்த வழக்கில், சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு 20 ஆண்டு சிறை தண்டனை  விதித்து சிபிஅய் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தனக்கு கருணை காட்டும்படி, நீதிபதியிடம் சாமியார் கதறி அழுதார். தண்டனை விபரம்  வெளியாவதைத் தொடர்ந்து அரியானாவில் ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டதால், வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன.

அரியானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், ‘தேரா சச்சா சவுதா’ ஆன்மீக அமைப்பின் தலைமை சாமியார் குர்மீத் ராம் ரகீம்  சிங் (50). இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் சீடர்கள் இருவர், சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். 1999ஆம் ஆண்டு முதல் 2001  வரை சாமியார் தங்களை மிரட்டி பாலியல் வன் முறை செய்ததாக கடந்த 2002இல் புகார் அளித்தனர்.

15 ஆண்டுகளாக நடந்த வழக்கு

கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அரியானாவின் பஞ்ச்குலா சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் கடந்த 25ஆம் தேதி தீர்ப் பளித்தது. இதில்,  சாமியார் குர்மீத் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ஜகதீப் சிங், தண்டனை விபரம் 28ஆம் தேதி வெளியிடப் படும் என அறிவித்தார். இதைத்  தொடர்ந்து சாமியார் குர்மீத், ரோடக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார்.தீர்ப்பு வெளியானதும், அரியானாவில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. சாமி யாரின் ஆதரவாளர்கள், பஞ்ச்குலா நீதிமன்ற வளாகத்தை சுற்றிய  பகுதியிலும், ஆசிரம தலைமையகம் அமைந்துள்ள சிர்சா மாவட்டத் திலும் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். வாகனங்கள், கடைகள் அடித்து  நொறுக்கப் பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த வன்முறையில் 38 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துணை ராணுவம் குவிக்கப்பட்டும், 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டும் அரியானாவில் நடந்த பயங்கர வன்முறை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சாமியார் குர்மீத்தின் தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட இருந்ததால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது. பஞ்சாப்-அரியானா  உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாமியார் குர்மீத் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுனாரியா சிறையில் சிறப்பு சிபிஅய் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சிறைச் சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் ராணுவம் சீல் வைத்தது. சிறையை சுற்றி  10 கிமீ. தொலைவுக்கு யாரும் நுழைய அனு மதிக்கப்படவில்லை. ரோடக் மாவட்டம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டது.அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப் பட்டன. வதந்திகள் பரவுவதை தடுக்க செல்போன் இன்டர்நெட்  சேவை துண்டிக்கப் பட்டிருந்தது. சிறைச்சாலையை சுற்றி, பாதுகாப்பு படையினர் துப்பாக்கியுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். ரயில் நிலையம்,  பேருந்து  நிலையம் உள்ளிட்ட பொது இடங் களில் காவலர்கள்  குவிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

சிறையில் சிறப்பு நீதிமன்றம்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சிபிஅய் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் சண்டிகரில் இருந்து ரோடக்  மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். சுனாரியா சிறைச்சாலைக்கு அருகில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது.

சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி ஜகதீப் சிங், தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக, இரு தரப்பு வாதங் களை கூற தலா 10  நிமிடங்கள் வழங்கினார். அப்போது, சாமியார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சாமியார் குர்மீத் சமூக சேவகர் என்பதால், அவருக்கு தண்டனை  வழங்கு வதில் கனிவு காட்ட வேண்டும் என கெஞ்சினார். சிபிஅய் தரப்பில், சாமியாருக்கு அதிக பட்ச தண்டனை வழங்க கேட்டுக் கொள் ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜகதீப் சிங்,  சாமியார் குர்மீத் துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இரு பெண்களை பாலியல் வன்முறை செய்த இரு குற்றச்சாட்டுகளுக்கு தலா 10  ஆண்டு சிறையும், தலா ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 
தலா ரூ.14 லட்சம் 

அபராதத்தில் இருந்து பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம்  வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். தலா 10 ஆண்டு சிறை தண்டனையையும் ஏககாலத்தில் இல் லாமல், தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்  எனவும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

தண்டனை விபரத்தை கேட்டதும், அங்கு ஆஜர்படுத்தப்பட்ட சாமியார் குர்மீத் உடைந்து போனார். கண்களில் கண்ணீருடன் கதறி அழுத அவர்,  நீதிபதியின் கையை பிடித்து தன்னை மன்னிக்கும்படியும், கருணை காட்டுமாறும் புலம்பினார். இதையடுத்து, குர்மீத்துக்கு மருத்துவ பரிசோதனை  மேற் கொள்ளப்பட்டு மீண்டும் சிறையில் அடைக் கப்பட்டார். தீர்ப்பு விபரம் வெளியானதைத் தொடர்ந்து வன்முறைகள் சம்பவங்கள் நடக்காமல் இருக்க  ராணுவம், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்சா மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. மாநிலத்தில் ஒன்றிரண்டு சம்ப வங்களை தவிர வன்முறை இன்றி அமைதி நிலவியது. குர்மீத்துக்கு வழங்கப்பட்ட தண் டனையை பல்வேறு தரப்பினர்  வரவேற்றுள் ளனர். இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக சாமியார் தரப்பில் கூறப்பட் டுள்ளது.

கண்டதும் சுட உத்தரவு

சாமியார் குர்மீத் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதும், கடந்த 25ஆம் தேதி நடந்த பயங்கர வன்முறையில் அரியானா மாநில அரசுக்கு கடும் அவப்பெயர்  ஏற் பட்டது. இதனால், தீர்ப்பு விபரம் வெளி யானதும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. இதனால்,  கலவரத்தில் ஈடு படவோ, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ யார் முயன்றாலும் கண்டதும் சுட உத்தரவிடப் பட்டிருந்தது. ரோடக் மாவட்ட  துணை ஆணையர் அதுல் குமார் கூறுகையில், வன்முறையை யாராவது பரப்பினால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த காவல்துறையினர் தயங்க மாட்டார்கள்  என்றார்.

தீவிர கண்காணிப்பினால், சாமியார் ஆதர வாளர்கள் ஒருவர் கூட சுனாரியா சிறையை ஒட்டிய பகுதியில் நுழைய முடியவில்லை.

-விடுதலை29.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக