ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சாமியாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் ஏற்கெனவே பெற்றோருடன் வந்த ஒரு சிறுமியை பெற்றோர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள நிலையில் தற்போது 2ஆவது முறையாக வசமாக சிக்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வென்கோஜியில் ஞானானந்த ஆசிரமம் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரபலமான இந்த ஆசிரமத்தின் தலைவராக சாமியார் பூர்ணானந்த சரஸ்வதி உள்ளார்.
பெற்றோரை இழந்த பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் ஏராளமானவர்கள் இந்த ஆசிரமத்தில் இருந்து வருகின்றனர். இங்கு 15 வயது சிறுமி ஒருவரும் தங்கி இருந்தார். இந்த குழந்தைகளின் பெயரைச்சொல்லி வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் இவரது மடத்திற்கு பலர் பணம் அனுப்பிவருகின்றனர்.
வேத விற்பன்னர் மற்றும் அனைத்து உலக ஆசைகளில் இருந்தும் விடுபட்டு பூர்ணாகதி அடைந்தவர் என்ற பட்டத் தையும் சாமியார் அமைப்பு இவருக்குக் கொடுத்துள்ளது. இதனை அடுத்து இவர் பூர்ணானந்த சரஸ்வதி என்று அழைக்கப்பட்டார்
இவர் மீது ஏற்கெனவே ஆசிரமத்தில் உள்ள சிறுமிகளுக்குப் பாலியல் ரீதியில் தொல்லை தருவதாகக் கூறி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. அந்தத் தொலைக்காட்சி செய்தியாளர் மிரட்டப்பட்டார். அதன் பிறகு அந்த பாலியல் வன்கொடுமை செய்தி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்திக்க பெற்றோருடன் வந்த சிறுமி மீது ஆசைப்பட்டு பெற்றோருக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
ஆனால் அவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாக அந்தக் கொடுமை பாலியல் தொல்லை என்று சாதாரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார். அன்றே அதிகாரவர்க்கம் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் தான் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதி, தனது ஆசிரமத்தில் இருக்கும் மேலும் பல சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் அவரது பாலியல் வக்கிரத்தின் கொடுமைகள் தாங்காமல் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு அந்தச் சாமியார் "நான் ஏற்கெனவே சிறைக்குச் சென்று வந்துள்ளேன். இனிமேல் என் மீது யார் புகார் கொடுத்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்
ஆகவே இதை வெளியில் சொன்னால் நீயும், இதர பிள்ளைகளும் பல கொடுமைகளை சந்திக்க நேரிடும்" என மிரட்டல் விடுத்தார்.
இதனால் அந்தச் சிறுமி சம்பவம் குறித்து வெளியில் கூற முடியாமல் மனம் நொந்து போனார். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மடாதிபதி பூர்ணானந்தா சரஸ்வதி, சிறுமியையும், ஆசிரமத்தில் உள்ள வேறு சில சிறுமிகளையும் தொடர்ந்து வலுக்கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சிறுமி யாருக்கும் தெரியாமல் ஆசிரமத்தை விட்டு வெளியேறி ரயில் மூலம் விஜயவாடா சென்றார். ரயில் நிலையத்தில் ஆதரவற்ற ஒரு சிறுமி ஒருவர் அழுது கொண்டு இருப்பதைக் கண்ட ரயில்வே காவல்துறையினர் அவரை மீட்டு விசாரித்தனர்.
விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுதபடி கூறியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து ஆசிரமம் இருக்கும் திஷா என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதியை உடனடியாக கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
நாடு எந்தத் திசையில் போய்க் கொண்டு இருக் கிறது? சாமியார்கள் என்ற போர்வையில் காமவெறிக் கசடர்கள் கிளம்பி விட்டனர். நாட்டில் நடப்பது மதவாத ஆட்சியாயிற்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக