புதன், 23 ஜனவரி, 2019

மந்திரத்தால் குழந்தை பிறக்குமா? (தலைப்புரை)

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே புதூர் கிராமத்தை  சேர்ந்தவர்  பிரபாகரன் (35). இவர் பெயிண்டர். இவரது மனைவி ஜானகி (30). கடந்த 3 ஆண்டுக்கு முன் திருமணமான இவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தைப்பேறு வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமரைதாங்கல் பகுதியை சேர்ந்த சாமியார் பாபு (42) என்பவரை சந்தித்துள்ளனர்.  அப்போது சாமியார், பவுர்ணமி அன்று இரவு பூஜை செய்தால் உங்களுக்குக் கண்டிப்பாகக் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பூஜைக்கு தம்பதியினர் சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி கடந்த 20ஆம்தேதி அன்று நள்ளிரவு  பவுர்ணமியில் சாமியார் பாபு நடத்திய சிறப்பு! பூஜையில்  பிரபாகரன், ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். சாமியார் கேட்டுக்கொண்டபடி ஜானகி தனது பவுன் சங்கிலி, கம்மல் ஆகியவற்றைக் கழற்றி பூஜையில் வைத்துள்ளார்.

சாமியார் 'பயபக்தியுடன்' மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்க, அவ்விருவரும், கண்களை மூடி சாமியார் சொன்ன மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாமியார் பாபு, அங்கிருந்த பெரிய  கல்லை எடுத்து பிரபாகரனின் முகத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியதால் பிரபாகரன் மயங்கி விழுந்ததால்  அதிர்ச்சி அடைந்த ஜானகி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்  வருவதையறிந்த சாமியார், பூஜையில் வைத்திருந்த ஜானகியின் நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

அதன்பிறகு ஜானகி நடந்த விஷயங்களை சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து சாமியார் வீட்டின் முன் மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து, காஞ்சிபுரம் வட்ட காவல்துறை ஆய்வாளர்  ராஜாங்கம் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு மயங்கிக் கிடந்த பிரபாகரனை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக  சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் காவல்துறை துணைக் கண்காணிப் பாளர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.   காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடி சாமியார் பாபுவைத் தேடி வருகின்றனர்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இது போன்ற நிகழ்வுகள் வெட்கப்படத்தக்கவை!

குழந்தைப் பேற்றுக்கும் மந்திரங்கள் ஓதுவதற்கும் என்ன சம்பந்தம்? இரண்டு பெண்டாட்டிக்காரனான விநாயனுக்கே குழந்தை இல்லையே. அப்படி இருக்கும் பொழுது மதச் சடங்குகளைச் செய்வது மடத்தனத்தின் உச்சக் கட்டம் அல்லவா?

ஆன்மிக இதழ்களை வெளியிடும் நாளேடுகளும் இதற்கு முக்கிய காரணமாகும். விஞ்ஞான கருவி களைப் பயன்படுத்தி  அச்சிட்ட அதில் அறிவுக்குப் புறம்பான ஆபாச மூடத்தனங்களைப் பக்திப் போர்வையில் வாசிப்போரின் மூளைக்குள் திணிக்க லாமா?

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் பரப்ப வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக (51A-h) வெளியிடப்படும் ஆன்மிக இதழ்களுக்கு மூக்காணங் கயிறு தேவை.

-  விடுதலை நாளேடு, 22.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக