திங்கள், 12 நவம்பர், 2018

பெண்களை பாலியல் வன்முறை செய்த சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

சென்னை நவ.11 பெண்களை பாலியல் வன்முறை செய்த வழக்கில் சிக்கிய சாமியாரை, தேடப்படும் குற்றவாளியாக, தமிழக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சென்னை, தியாகராயர் நகர் பசுல்லா சாலையை சேர்ந்தவன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி (வயது 46) சாமியார் என, அறிவித்து கொண்ட இவன், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவது மற்றும்  அதே பகுதியில், ஆசிரமும் நடத்தி வந்தான். அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்களையும் நடத்தினான். தன் வசீகர பேச்சால், பெண்களை மயக்குவதிலும் கில்லாடி.சதுர்வேதியின் சொற்பொழிவை கேட்க, 2002 அக்டோபரில், சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலையைச் சேர்ந்த, தொழிலதிபர் ஒருவரின் மனைவியும், அவரது, 16 வயது மகளும், அடிக்கடி சென்றனர்.

அதை பயன்படுத்தி, இருவரையும், சதுர்வேதி, தன் பிடியில் கொண்டு வந்தான். இதனால், அவன் ஆட்டி வைக்கும் கைப் பாவையாக மாறினர். இருவரும், அவ்வப்போது, சதுர்வேதியின் ஆசிரமத்திலேயே தங்கினர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சாமியார் சதுர்வேதி, தாய் மற்றும் மகளை, பல முறை பாலியல் வன்முறை செய்துள்ளான்.அவர்களை பகடை காயாக பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள, தொழிலதிபர் வீட்டின் கீழ் தளத்தை, அறக்கட்டளைக்கு என, எழுதி வாங்கி உள்ளான். அந்த வீட்டில், தன் ஆசிரம உதவியாளர்களை குடியமர்த்தி, தொல்லை கொடுத்து உள்ளான்.

அவனது உண்மை முகம் தெரிய வந்ததும், தாயும், மகளும் விலகினர். அதனால், ஆத்திரம் அடைந்த சதுர்வேதி, தன் ஆசிரம உதவியாளர்கள் உதவியுடன், 2004 செப்., 17இல், ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்த, தொழிலதிபர் மனைவி மற்றும் மகளை, ஆந்திராவுக்கு கடத்திச் சென்று, பாலியல் சித்ரவதை செய்துள்ளான்.இதுகுறித்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், தொழிலதிபர் புகார் அளித்தார்.

மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து, 2004 நவ., 6இல், சதுர்வேதியை கைது செய்தனர். அவனது பிடியில் இருந்த, இருவரையும் மீட்டனர்.

இந்த வழக்கு, சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராகாமல், 2016 நவ., 3இல் இருந்து, சதுர்வேதி தலைமறைவாகி உள்ளான். அவனை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளனர்.

அவன், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கும், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இருப்பினும், காவல்துறையை ஏமாற்றி விட்டு, அவன், நேபாளம் பறந்து விட்டதாக தெரிகிறது.

- விடுதலை நாளேடு, 11.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக