புதன், 21 ஜனவரி, 2015

அரவிந்தர் “ஆ”சிரமத்தில் பாலியல் கொடுமை

சிக்கும் வரை சாமியார்; சிக்கிய பின் போலிச் சாமியார் என்பார்கள் வழக்கத்தில். ஆசிரமங்களில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் செய்தி வரும்போது, எல்லா மடமும் அப்படியில்ல... நல்ல மடங்களும் இருக்கு என்று கைகாட்டுவார்கள். பிரேமானந்தா மாட்டிய போது, சாய்பாபாவைக் காட்டினார்கள்.. சங்கர மடத்தைக் காட்டினார்கள்.
சாய்பாபாவும், சங்கரமடமும் மாட்டியபின், புதிய சாமியார்களைக் காட்டினார்கள். புதிதாய் வந்தவர்களும் சீக்கிரம் சீக்கிரமாய் மாட்டியபின், வெள்ளைக்காரப் போலீசிடம் மாட்டாமல் இருப்பதற்காகவே பாண்டிச்சேரியில் ஆசிரமம் கட்டிய அரவிந்தரின் ஆரோவில் ஆசிரமத்தைக் கை காட்டினார்கள். (நீண்டநாட்களாக மாட்டாமல் இருப்பதற்காக போலும்!) இப்போது அங்கே நடக்கும் உண்மைகளும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த அரவிந்தர் பக்தர்கள் தங்கள் சொத்துகளையும், உடைமைகளையும் ஆசிரமத்திற்குக் கொடுத்துவிட்டு அங்கேயே தங்கியிருக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்குவதற்காக ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் புதுவை ஒயிட் டவுண் பகுதியில் பல குடியிருப்புகள் உள்ளன. இதில் சுமார் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி யுள்ளனர். இவர்களுக்குப் பல விதிமுறைகள் உண்டு. நிர்வாக விதிமுறைகளை மீறுவோர்-மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவை குருசுகுப்பத்தில் உள்ள குடியிருப்பில் பீகார் மாநிலச் சகோதரிகள் அய்ந்துபேர் சேவை செய்து வந்தனர். இவர்களின் பெற்றோர் புதுவையில் வேறொரு இடத்தில் வீடு எடுத்து வசித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோதரிகள் அய்வரும், ஆசிரம நிர்வாகிகள் சிலர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல்துறையில் புகார் அளித்ததுடன், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்தனர். ஆசிரம நிர்வாகத்தின்மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினர். சகோதரிகள் கொடுத்த புகார் காவல் துறையினரால் பதிவு செய்யப்படவில்லை. எனவே, நீதிமன்றத்தை அணுகிப் புகாரைப் பதிவு செய்ய உத்தரவு பெற்றனர்.
ஆசிரம விதிகளை மீறி காவல்துறையில் புகார் கொடுத்ததால் அய்ந்து சகோதரிகளையும் ஆசிரமக் குடியிருப்பிலிருந்து வெளியேற வேண்டும் என ஆசிரம நிர்வாகம் கூறியது. சகோதரிகள் குடியிருப்பிலிருந்து வெளியேற மறுத்ததுடன், ஆசிரம நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆசிரம நிர்வாகத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததுடன், ஆசிரமக் குடியிருப்பிலிருந்து சகோதரிகள் வெளியேற வேண்டும் என்றும் ஆணையிட்டது.
சகோதரிகள் உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றமும் ஆறுமாத காலம் அவகாசம் கொடுத்து, குடியிருப்பிலிருந்து சகோதரிகள் வெளியேற வேண்டும் என ஆணையிட்டது.
உச்ச நீதிமன்றம் கொடுத்த ஆறு மாதக் கெடு முடிந்தும் சகோதரிகள் குடியிருப்பை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தனர். இதனைப் பார்த்த ஆசிரம நிர்வாகம், நீதிமன்ற உத்தரவைக் காட்டி, காவல்துறையினர் மூலம் சகோதரிகளைக் குடியிருப்பிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது. இதனை அறிந்த சகோதரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தங்களை வெளியேற்றினால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியுள்ளனர். சகோதரிகளுள் ஒருவர், நான்கு மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று தங்களை வெளியேற்றினால் இங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். மற்ற சகோதரிகள் கீழ்தளத்தில் நின்றுகொண்டு அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, குடியிருப்பிலிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் அங்கு வந்து, மேலிருந்து குதிக்கும் முடிவைக் கைவிட்டு கீழே இறங்கி வரும்படிக் கூறியபோது சகோதரி மறுத்துள்ளார். பேட்டி எடுக்க பத்திரிகை-யாளர்கள் மொட்டை மாடிக்குச் சென்றபோது காவல்துறைத் துணை ஆய்வாளரும் உடன் சென்று மீட்டுக் கைது செய்துள்ளனர்.
மற்ற 4 சகோதரிகளையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பியுள்ளனர். தங்கள் பெற்றோரிடம் செல்வதாகக் கூறிச் சென்ற சகோதரிகள் மறுநாள் அதிகாலையில் காலாப்பட்டு கடற்கரைப் பகுதிக்குச் சென்று பெற்றோருடன் கைகோர்த்தபடி கடலுக்குள் இறங்கியுள்ளனர்.
ஏழு பேரும் தண்ணீரினுள் அதிக தூரத்திற்குச் சென்றுவிட்டதால் இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த மீனவர்களால் நான்கு பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. சகோதரிகளுள் இரண்டு பேரும், அவர்களது தாயாரும் உயிரிழந்துவிட்டனர்.
உயிர் பிழைத்த சகோதரிகளுள் ஒருவர்,
அரவிந்தர் ஆசிரமக் குடியிருப்பில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தோம். அங்கு எங்களுக்குப் பாலியல் தொந்தரவுகள் வந்தன. இதனை எதிர்த்து ஆசிரமத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினோம். போலீசில் புகார் அளித்தோம். ஆனால் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை ஆசிரம நிர்வாகம் வெளியேற்றியதால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்தோம்.
பெற்றோர் வீட்டிற்குச் சென்ற நாங்கள் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தோம். பின்னர் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு எடுத்தோம். அதிகாலையில் குடும்பத்துடன் சின்னகாலாப்பட்டு கடற்கரைக்குச் சென்றோம். அப்போது அங்கு இருந்த 2 பேர் என்னைத் தூக்கிச் சென்று கற்பழித்தனர். ஏற்கெனவே வேதனையில் இருந்த எங்களுக்கு இது பெரிய கொடுமையாக இருந்தது.
அதன் பின்னர் நாங்கள் ஏழு பேரும் கடலில் குதித்தோம். எங்களது அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் நான்கு பேரைக் காப்பாற்றினர். நான் கற்பழிக்கப்பட்டதை நிரூபிக்க டி.என்.ஏ. சோதனை நடத்த தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
- செல்வா
--------------------
ஆரோவில்லில் இன்னுமோர் அட்டூழியம் நில அபகரிப்பு
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவில் ஆரோவில் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்டது கோட்டக்கரை கிராமம். விவசாயம் மற்றும் கால்நடை மேய்த்தல் போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களைச் செய்து வாழ்ந்து வரும் இக்கிராம மக்கள் பயன்படுத்திய பொது-வழியானது முற்றிலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் ஆகும். இவர்கள் இவ்வாறு அந்நிலத்தைத் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வேளையில், திடீரென்று பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஆரோவில் நிருவாகத்தைச் சேர்ந்த அங்காத்து, கோபால், கோதண்டராமன் மற்றும் ஆரோவில் பகுதியின் முக்கியப் பிரமுகர்கள் இணைந்து, அரசாங்கத்திற்குச் சொந்தமான அம்மக்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலங்களைச் செம்மைப்படுத்தி சுத்தம் செய்து கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு சுத்தம் செய்திருந்த பகுதியை சிறுவர்கள் தங்களது விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தச் சிறுவர்கள் இளைஞர்களாக மாறிய பிறகும் இந்தப் பகுதியில் விளையாடி வந்த வேளையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வேளையில் ஆரோவில்லின் எல்.ஆர்.எம். (L.R.M.) என்ற ஒப்பந்தக்காரர் மூலமாக அந்தப் பகுதியைச் (புறம்போக்கு) சுற்றி வேலி போட்டிருக்கிறார்கள். இதனை அறிந்த அக்கிராம மக்கள் உடனடியாக வேலி போடும் இடத்திற்குச் சென்று ஏன் இவ்வாறு வேலி போடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் இந்த வேலிப் பகுதியினை நீங்கள் பயன்படுத்தலாம், உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படி இருந்துவந்த சூழலில் திடீரென்று ஒருநாள் விளையாட்டு மைதானம் அமைந்திருந்த வேலிப் பகுதியில் கனரக (கண்டைனர்) வாகனத்தை நிறுத்தியதுடன், இனிமேல் கோட்டக்கரை கிராம மக்கள் இந்த இடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று மிரட்டியிருக்கிறார்கள்.
இது போதாதென்று 27.06.2014 அன்று மாலை நேரத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சரசு, மாரி, தெய்வானை, பூரணி, கலா, மனோரஞ்சிதம் ஆகிய ஆறு பெண்களும் இந்தப் பொதுவழியாக இளங்காளி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது எதிர்த்திசையில் சத்பிரேம் என்பவர் கோவிலுக்குச் செல்லும் பாதையினை அடைத்துள்ளார். சத்பிரேம் என்பவர் ஆரோவில்லில் தங்கியிருக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர். கோட்டக்கரை கிராம மக்கள் ஆண்டாண்டுக் காலமாகப் பயன்படுத்தி வந்த பொதுவழியினை சத்பிரேம் தடுத்து வைத்ததைப் பொறுக்க-முடியாமல் வேறு வழியின்றி, இது அரசாங்கத்திற்குச் சொந்தமான புறம்போக்கு நிலம். மேலும் எங்கள் கிராம மக்கள் இவ்வழியைத்தான் பிரதான பாதையாகப் பயன்படுத்தி வருகிறோம். நீங்கள் யார் இதைத் தடுப்பதற்கு? என்று சத்பிரேமைக் கடக்க முயன்ற பெண்களை நாக்குக் கூசும் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஆடைகளைத் தொட்டும் கைகளைப் பிடித்தும் இழுத்து கீழே தள்ளியிருக்கிறார் வெளிநாட்டுக்காரரான சத்பிரேம். மேலும் அவர், எனக்கு அனைவரையும் தெரியும். எனவே உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஏளனமாகக் கூறியிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட கோட்டக்கரை கிராம மக்கள் வெகுண்டெழுந்து 28.06.2014 அன்று பகலில் மொரட்டண்டி சுங்கவாயிலை (டோல்கேட்) முற்றுகையிட்டு கிராமப் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சத்பிரேமையும், அரசாங்க நிலத்தை அபகரிக்க முயன்ற அங்காத்து, கோபால், கோதண்டராமன் உட்பட்டவர்களையும் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல் நடந்த தகவலறிந்து அங்கு வந்த கோட்டக்-குப்பம் உதவி காவல் கண்காணிப்பாளர் நிஷாசேகர், தாசில்தார் ருக்மணி சிறீவித்யா மற்றும் போலீசார்  மறியலில் ஈடுபட்டவர்-களிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக அன்று இரவு கோட்டக்கரை கிராமப் பெண்கள் ஆரோவில் காவல் நிலையத்தை முற்றுகை-யிட்டு குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பெண்கள் போராட்டத்தின் விளைவாக சம்பந்தப்பட்ட சத்பிரேம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. மேலும் ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் ரகுநாதன் அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பதாக அக்கிராம மக்களுக்கு உத்திரவாதமும் அளித்தார். அதன்மீது எவ்வித மேல்நடவடிக்கையும் இன்றுவரை நடை-பெறவில்லை. அரசாங்கத்திற்குச் சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் (சர்வே எண்: 286) மட்டுமல்லாமல் மேலும் சுமார் 140 அரசாங்கப் புறம்போக்கு இடத்தினையும் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அங்குள்ள மக்கள் மிகவும் வேதனையுடன்,   சிறு ஏரிகளுக்குச் செல்லவேண்டிய வாய்க்கால், ஓடைப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்திப் பேசிய சத்பிரேமைக் கைது செய்யாமலும், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தவர்களிடமிருந்து மீட்டு எடுக்க எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியப்படுத்துகிறார்கள்  அரசு அதிகாரிகள்.
- சோசு
உண்மை1-15ஜனவரி2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக