புதன், 21 ஜனவரி, 2015

சிறுமி கொலை-பெண் மந்திரவாதி கைது

திருச்சி சிறுமி கொலையில் பெண் மந்திரவாதி கைது


திருவெறும்பூர்: துவாக்குடியில், சடலமாக மீட்கப்பட்ட குழந்தை, குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் தள்ளி கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தனர். திருச்சி அருகே உள்ள துவாக்குடி வடக்குமலை அய்யனார் கோயில் தெருவில் வசிப்பவர்கள் முனியப்பன்-அமராவதி தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள். இளைய மகள் இன்பரசி (4). அங்குள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள். கடந்த 30ம் தேதி, சிறுமி இன்பரசியை அருகில் உள்ள முனியப்பனின் தங்கை நாகராணி வீட்டில் விட்டு விட்டு சென்றார். மதியம் 2 மணியளவில் இன்பரசியை காணவில்லை. இதுகுறித்து துவாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்தநிலையில் அருகில் உள்ள குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில், இன்பரசியை சடலமாக போலீசார் கண்டெடுத்தனர். சிறுமியின் சாவுக்கு அப்பகுதியில் வசிக்கும் பெண் மந்திரவாதி தனம் (55) என்பவர்தான் காரணமாக இருக்கக்கூடும் என்றும், அவர் நரபலி கொடுத்து சிறுமியை கொன்றிருப்பார் என்றும் பொதுமக்கள் புகார் கூறி அவரது வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
தனம் சில வருடங்களுக்கு முன் அதே பகுதியில் 3 குழந்தைகளை கடத்தி வந்து சத்திரம் பகுதியில் ஒளித்து வைத்திருந்தார். 

பின்னர், அருள்வாக்கு என்ற பெயரில் அந்த குழந்தைகள் இருக்கும் இடத்தை கூறி அவர்களது பெற்றோரிடம் பணம் பறித்தார். கடத்தப்பட்ட குழந்தைகள், தனம் தான் தங்களை கடத்தி வைத்திருந்தார் என கூறியதால் குட்டு அம்பலமானது. இதுபோலதான், இன்பரசியின் பெற்றோரிடம் பணம் பறிக்க அவளை கடத்தி நரபலி கொடுத்திருப்பார் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே இன்பரசியின் உடல் திருச்சி தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கையில், தண்ணீர் அதிகமாக குடித்து குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்பரசி குவாரி தண்ணீர் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே பெண் மந்திரவாதி தனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
-தினகரன்4.1.15,பக்5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக